புதிய பேருந்து பணிமனை அமையவுள்ள இடத்தை பார்வையிட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்
மக்களின் கோரிக்கையை ஏற்று குன்னம் பகுதியில் புதிய பனிமை அமைக்க நடவடிக்கை
குன்னம் பகுதியில் புதிய பேருந்து பணிமனை அமையவுள்ள இடத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் 29.03.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில் விதி எண் 110 கீழ் குன்னம் பகுதியில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் போக்குவரத்துத்துறையின் கீழ் புதிய பணிமனை அமைக்கப்படவுள்ள இடத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மாவட்ட ஆட்சியர் கற்பகம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் நகரை ஒட்டி அரசு மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம், சார்பு நீதிமன்றம், கால்நடை மருத்துவமனை, அரசு கலை அறிவியல் கல்லூரி ஆகியவைகள் உள்ளதாலும், அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அதிக அளவில் பொதுமக்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பேருந்தில் சென்று வர ஏதுவாக உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் ரூ.3.55 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து பணிமனை அமைக்க ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
அதையடுத்து பழைய குன்னம் வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள வளாகத்தில் புதிய பேருந்து பணிமனை அமைக்கப்படவுள்ளது. அந்த இடத்தை பார்வையிட்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், இடத்தை விரைவில் சுத்தம் செய்து, பேருந்துகள் வந்து செல்ல ஏதுவான சாலை வசதி, பேருந்துகளை நிறுத்துவதற்கான கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஓய்வெடுக்கும் அறைகள், கழிவறைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை விரைந்து முடிக்க வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, போக்குவரத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.