சேலத்தில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு

சேலத்தில் உள்ள நிறுவனங்களில் குழந்தை தொழிலாளார்கள் பணியமர்த்தப்பட்டுனரா என தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-04-10 10:22 GMT

சேலத்தில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு

சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கிருஷ்ணவேணி தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் பழைய பஸ் நிலையம், சங்கர் நகர், வின்சென்ட், ராமகிருஷ்ணா சாலை, செர்ரி ரோடு, ஓமலூர் மெயின் ரோடு, 4 ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், இருசக்கர வாகனங்கள், கார் பழுதுபார்க்கும் கடைகள் மற்றும் இதர நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளார்களா? என திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது குழந்தை தொழிலாளர் மற்றும் வளரிளம் பருவத்தினர் யாரும் பணியமர்த்தப்படவில்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி கூறும் போது, ‘14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்த நிறுவனத்திலும் பணியமர்த்த கூடாது. 15 முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினர்களை அபாயகரமான எந்தவொரு பணியிலும் அமர்த்துவது குற்றமாகும். மீறினால் 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்’ என்றார்.

Tags:    

Similar News