நிலப்பிரச்சனை, பெண் உயிரிழப்பு, சடலத்துடன் போராட்டம்-ஓசூரில் பரபரப்பு
ஓசூர் அருகே கடந்த 8 ஆம் தேதி சானமாவு கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தை அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நிலத்தின் உரிமையாளர்களான மாதேவம்மா, முருகேஷ் மற்றும் மஞ்சுநாத் ஆகிய 3 பேரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேரில் மாதேவம்மா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த அவரது உறவினர்கள் சானமாவு கிராமத்தில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சூளகிரி தாசில்தார் மற்றும் தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட நிலத்திற்கான உரிய இழப்பீடு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு மறியல் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து மாதேவம்மாவின் உடல் சானமாவு கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அப்போது அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து உடலை வெளியே எடுத்து சாலையில் வைத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்தனர் .அப்போது சில போலீஸாரையும் அவர்கள் தாக்கிதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இதனையடுத்து போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மற்றும் கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். உயிரிழந்த மாதேவம்மாவின் உடல் அவரது சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய ஆம்புலன்ஸ் வாகனத்தில் எடுத்து செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் சானமாவு கிராமத்தில் காலை முதலே பெரும் பரபரப்பு காணப்பட்டது. அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் பொருட்டு 100க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.