வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
குமாரபாளையத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சில கோரிக்கைகள் வலியுறுத்தி நீதிமன்ற காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இது குறித்து குமாரபாளையம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சரவணராஜன் கூறியதாவது: குமாரபாளையம் நீதிமன்ற வளாகம் மூன்றரை ஆண்டுகள் முன்பு துவங்கப்பட்டது. அப்போது முதல் வழக்கறிஞர்களுக்கு தனியாக ஓய்வு அறை வேண்டும், உணவு உண்ண அறை, ஆண் வழக்கறிஞர்கள், பெண் வழக்கறிஞர்கள் உடை மாற்றும் அறை, இல்லாததால் பெறும் அவதி ஏற்படுகிறது.
சங்க நிதியிலிருந்து இவைகளை அமைத்து கொள்ள அனுமதி தரவில்லை. பொதுமக்கள் அமர்வதற்கு போதிய இருக்கைகள், பொதுமக்களுக்கான கழிப்பிடங்கள், வழக்கறிஞர்களுக்கான ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தவில்லை. பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நீதிபதி குணசேகரன் அனுமதி தரவில்லை. இதனை கண்டித்து ஏப். 15 முதல் நீதிமன்ற காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் போராட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.