சட்டப்பணிகள் விழிப்புணர்வு சிறப்பு முகாம்!

சட்டப் பணிகள் ஆணை குழு செயல்பாடுகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

Update: 2024-05-25 15:41 GMT

சட்ட சேவைகள் ஆணையம், சமூகத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு சட்ட சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சட்ட சேவைகளை வழங்குதல், உயர் நீதிமன்ற வழக்குகள் உட்பட கீழ்நிலை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளைக் கண்டறிந்து லோக் அதாலத் நடத்துதல், வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களின் முன் வழக்குகளுக்கு லோக் அதாலத் நடத்துதல், மாநிலத்தின் அத்தியாவசிய சேவைகளை மக்கள் பெறுவதற்கு கிராமங்களில் மேக்ரோ மற்றும் மைக்ரோ சட்ட உதவி முகாம்களை நடத்துதல் உள்பட பல்வேறு பணிகளை சட்ட பணிகள் ஆணைக்குழு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊட்டி சிம்ஸ் பூங்காவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நீலகிரி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவரும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார். குன்னூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் அப்துல் சலாம், விரைவு நீதித்துறை நீதிமன்ற நடுவர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சட்ட விழிப்புணர்வு முகாமில் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் ஆணைய செயல்பாடுகள் குறித்து துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. முடிவில் பெண்கள் உரிமை குறித்த விழிப்புணர்வு புத்தகம் வெளியிடப்பட்டது. நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன், குன்னூர் காவல் துணை கண்காணிப்பாளர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்ட பணிகள் ஆணைக்குழு மூலம் விழிப்புணர்வு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News