சிறுத்தை நடமாட்டம்; வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
குனியமுத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதால், வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கோவை குனியமுத்தூர் ஜே.ஜே நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த நாய் மற்றும் பூனை உள்ளிட்ட விலங்கினங்கள் மர்மமான முறையில் காணாமல் போனது. இந்நிலையில் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் நாய்,பூனை போன்றவற்றை சிறுத்தை வேட்டையாடுவதாக தகவல் பரவியது. அபராமி நகர், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நாய்,பூனை போன்றவை மாயமாகின. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இது குறித்து மதுக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
மதுக்கரை வனத்துறையினர் இன்று ஜே.ஜே.நகர்,அபிராமி நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் வனத்துறை குழுவினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள புதர்கள்,பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் சந்தேகப்படும் படியான விலங்கினங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் இந்த பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி உள்ளனர்.சிறுத்தை இருப்பதாக வெளியான தகவல் காரணமாக ஜே. ஜே நகர் மற்றும் அவரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.