சொத்துக்காக தந்தையை கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

குன்னூர் அருகே சொத்துக்காக தந்தையை அடித்துக் கொன்ற வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீலகிரி மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2024-04-07 04:13 GMT

சின்னபாண்டி 

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்த சோலூர்மட்டம் நீர்கண்டி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாண்டியன், 75. இவருடைய மனைவி சரஸ்வதி. பாண்டியன் அந்த பகுதியில் கோழிக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். சரஸ்வதி அங்குள்ள எஸ்டேட்டில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பாண்டியனுக்கு, சின்னபாண்டி, 46 என்ற மகனும், 3 மகள்களும் உள்ளனர். சின்ன பாண்டி உள்பட 4 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. சின்ன பாண்டியின் மனைவி பிரிந்து சென்று விட்டதால் அவர் மட்டும் தனது தந்தையுடன் வீட்டில் வசித்து வந்தார்.

சின்னபாண்டியின் மூத்த மகள் வேளாங்கண்ணி தனது குடும்பத்துடன் நீர்கண்டியில் தந்தையின் வீடு அருகே உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் நீர்கண்டியில் உள்ள பாண்டியனுக்கு சொந்தமான வீட்டை தன் பெயரில் எழுதி தருமாறு சின்னபாண்டி அவ்வப்போது தந்தையுடன் சண்டையிட்டு வந்தார். இந்த நிலையில் கடந்த 2019 செப்., 23 அன்று வீட்டை தன் பெயரில் எழுதி தர வலியுறுத்தி தந்தையுடன் சண்டையிட்டார். அதற்கு அவர் மறுக்கவே ஆத்திரமடைந்த சின்னபாண்டி அருகில் இருந்த மரக் கட்டையை எடுத்து பாண்டியனை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்ட சம்பவ இடத்திற்கு வந்த வேளாங்கண்ணி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தந்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சின்ன பாண்டி அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் சோலூர்மட்டம் காவல் ஆய்லாளர்கள் ஜெயமுருகன், வேல்முருகன், உதவி காவல் ஆய்வாளர் ஷர்மிளா தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த மறுநாள் பெள்ளக்காடு பகுதியில் தலைமறைவாக இருந்த சின்னபாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று  தீர்ப்பு வெளியானது. இதன்படி தந்தையை அடித்துக் கொன்ற சின்னபாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 5 ஆண்டு சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் ஆனந்தன், முகமது ஆகியோர் ஆஜராகி வாதாடினார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சின்னபாண்டி மேட்டுப்பாளையம் பகுதியில் யானைத் தந்தம் கடத்திய வழக்கில் ஏற்கனவே கைதாகி சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News