மரக்காணம் பகுதியில் அதிரடி சாராய வேட்டை
மரக்காணம் பகுதியில் சாராய விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கள்ள சாராயத்தை குடித்துவிட்டு 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கள்ளச்சாராயம் புதுவை மாநில சரக்குகளை விற்பனை செய்து வந்த சாராய வியாபாரிகளை போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதன் காரணமாக இப்பகுதியில் கள்ளச்சாராய வியாபாரம் பெருமளவில் தடை செய்யப்பட்டது. இதனால் பல கள்ளசாராய வியாபாரிகள் இத்தொழிலை விட்டுவிட்டு புதுவை சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலை தேடி சென்றுவிட்டனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்பனை செய்த விஷ சாராயத்தை குடித்துவிட்டு நாற்பதுக்கு மேற்பட்டோர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும் பலர் உயிர் ஆபத்தானநிலையில் தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயத்தால் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்கும் வகையில் மரக்காணம் போலீசார் சோதனை நடத்தி முன்னாள் சாராய வியாபாரிகளான கழிக்குப்பம் மேட்டு தெருவை சேர்ந்த வெங்கடேசன் என்பவரது மகன் வெள்ளை ராஜா வயது 45, அதே கிராம முருகன் கோவில் தெருவை சேர்ந்த கருப்பன் மகன் சிவக்குமார் வயது 44, குரும்பரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் சரவணன் வயது 43, கழிகுப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த எத்திராஜ் மனைவி அஞ்சலை வயது 55, அதே பகுதியை சேர்ந்த குமார் மனைவி அம்சா ஆகிய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.