மதுரையில் 3 நாட்கள் மதுக்கடைகள் அடைப்பு - ஆட்சியர் அறிவிப்பு
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Update: 2023-10-27 07:42 GMT
தேவர் ஜெயந்தி அக்.30-ல் வருகிறது. அன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து அஞ்சலி செலுத்துவர். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்பதால் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மருது பாண்டியர்கள் நினைவு தினத்தை முன்னிட்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு அக்டோபர் 27,29,30 ஆகிய 3 தினங்கள் மட்டும் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக,அரசு உரிமம் பெற்றுள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள்,மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள், படைவீரர் கேண்டீன் மற்றும் அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டிருக்கும். மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும் தினத்தில் மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்க காவல்துறையினருக்கும்,அரசு அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறி மதுவிற்பனை நடைபெறுவது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் சங்கீதா சுற்றறிக்கை வாயிலாக அறிவித்து வெளியிட்டுள்ளார்.