புதிதாக தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி

நீட்ஸ் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-21 17:12 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 

தமிழக அரசால் ’புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்” (நீட்ஸ்) 2012-ஆம் ஆண்டிலிருந்து முதல் தலைமுறை தொழில் முனைவோருக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க, பன்னிரெண்டாம் வகுப்பு (+2) தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பட்டம், பட்டயம், ஐடிஐ/தொழிற்கல்வி ஆகிய கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும்.

பொதுப் பிரிவினர் 21 முதல் 45 வயது வரையிலும் மற்றும் சிறப்பு பிரிவினருக்கு (SC/ST, BC, MBC, பெண்கள், மாற்று பாலினத்தவர்கள், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) 21 முதல் 55 வயது வரையிலும் விண்ணப்பிக்க வயது வரம்பு உள்ளது. விண்ணப்பதாரர்கள் 3 வருடத்திற்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

மேலும் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த பொருளாதார ரீதியாக சாத்தியப்படக்கூடிய தொழில்கள் துவங்க ரூ.10.00 இலட்சம் முதல் ரூ.5.00 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்க பரிந்துரை செய்யப்படும். கடனுதவி பெற்று தொழில் துவங்கும் தொழில் முனைவோர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75.00 இலட்சம் மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளி தொழில் முனைவோர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் மானியமும் வழங்கப்படும்.

தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் கடனை திருப்பி செலுத்தும் மொத்த காலத்திற்கும் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற தகுதியுள்ள முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள் www.msmeonline.tn.gov.in/needs. என்ற இணைய முகவரியில் விண்ணப்பித்து தொழிற்கடன் பெற்று பயன் பெறலாம். மேலும், இதுதொடர்பான விபரங்களுக்கு பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், தேனி அவர்களை நேரிலோ அல்லது 04546-252081 மற்றும் 89255-34002 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News