நீலகிரியில் ரூ 3.75 கோடி பறிமுதல்
நீலகிரியில் ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றதாக இதுவரை 3.75 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்டதையடுத்து தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்தது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பாிசு பொருட்கள் கொடுப்பதை தவிர்க்கும் வகையில், நீலகிாி தொகுதியில் ஊட்டி, குன்னூா், கூடலூர், அவினாசி, மேட்டுப்பாளையம், பவானிசாகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு பறக்கும் படைகள், நிலையான மற்றும் நகரும் கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்புக குழுக்கள் என 72 குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த மாதம் 16ம் தேதி முதல் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி நேற்று வரை மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊட்டி, குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், பவானிசாகர் மற்றும் அவினாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை ரூ.3 கோடியே 70 லட்சத்து 17 ஆயிரத்து 306 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. முறையாக ஆவணம் அளித்தவர்களுக்கு ரூ.2 கோடியே 48 லட்சத்து 42 ஆயிரத்து 396 திரும்ப வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள ரூ.1 கோடியே 21 லட்சத்து 74 ஆயிரத்து 910 மாவட்ட நிர்வாகத்தின் கட்டுபாட்டில் உள்ளது. ரூ.2 லட்சத்து 69 ஆயிரத்து 394 பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் உரிய ஆவணங்கள் சமர்பித்த ரூ.2 லட்சத்து 09 ஆயிரத்து 616 மதிப்பிலான பொருட்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களை கருவூலகத்தில் அளித்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் வழங்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.