நீலகிரியில் சிறுபான்மையினருக்கு குறைந்த வட்டியில் கடன்

நீலகிரியில் சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Update: 2024-06-16 14:19 GMT

கோப்பு படம் 

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனி நபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இதன்படி தனி நபர் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். தனிநபர் கடன் ஆண்டிற்கான 6 வட்டி விகிதத்திலும் அதிக பட்ச கடனாக ரூ.20,00,000 வரை வழங்கப்படும். சுய உதவி குழுக்களுக்கான சிறு கடன் திட்டத்தில் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதில் ஆண்களுக்கு 8 சதவீதத்திலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000- வரை வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 வரை வழங்கப்படுகிறது.

சுய உதவிக்குழு கடன் திட்டத்தில் 7 சதவீத வட்டியில் ஒரு நபருக்கு நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 வரை வழங்கப்படுகிறது. சிறுபான்மை கல்விக்கடன் திட்டத்தில் மாணவ-மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை தொழிற் கல்வி, தொழிற்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக தனிநபர் கடன் திட்டத்தில் 3 சதவீத வட்டியில் ,

ரூ.20,00,000 வரையிலும், சுய உதவிக் குழு கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதத்திலும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலக வளாகத்தில்,

உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன்பெறலாம். கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிட சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம், திட்ட அறிக்கை, மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், கல்வி கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News