மதுரை வைகை ஆற்றில் 3வது நாளாக வெள்ளப்பெருக்கு
மதுரை வைகை ஆற்றில் மூன்றாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரைகளை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் வருசநாடு, சதுரகிரி உள்ளிட்ட மலை பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதையடுத்து வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்தது. மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த 10-ந்தேதி நீர்மட்டம் 71 அடியை நெருங்கியதையடுத்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றைய கால நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 67.65 அடியாக இருந்தது.
இந்த நிலையில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதி விவசாயிகள், மேலூர் ஒருபோக பாசன பகுதி விவசாயிகள் தங்கள் பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து சிவகங்கை, ராமநாதபுரம், வைகை பாசன 1,2 மற்றும் 3-ம் பகுதி விவசாயிகளுக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அடுத்த மாதம் 8-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்பட உள்ளது. ஏற்கனவே பாசனத்திற்காக வைகை அணையில் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது கூடுதலாக 4 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டுள்ளது. இதனால் 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் வந்து கொண்டிருக்கிறது.
வருகிற 8-ந்தேதி வரை சுமார் 2 ஆயிரத்து 466 கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் திறக்கப்பட உள்ளது. தற்போது இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் வைகை ஆற்றில் வருகிறது. வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் ஆகாயத்தாமரை செடிகளால் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது வெள்ளப்பெருக்கால் மூழ்கிய சாலையில் ஆபத்தான முறையில் பயணிகள் சென்று வருகின்றனர். வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஆரப்பாளையம் வைகை ஆற்றை ஒட்டியுள்ள சாலை நீரில் மூழ்கியது அதேபோல் யானைகள் வைகையாற்று தரைப்பாலம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சென்று வருகிறது.