நாமக்கல் : சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி வழிபாடு
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் நடைப்பெற்ற சிவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மஹா சிவராத்திரி விழாவையொட்டி, நாமக்கல் ஏகாம்பரேஸ்வரர் உடனமர் காமாட்சியம்மன் கோவிலில், நேற்று மாலை, 4:30 மணிக்கு பிரதோஷ பூஜையுடன், சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சிவராத்திரி பூஜையாக மாலை, 6:00 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 8:00 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, 2:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. தொடர்ந்து, இன்று அதிகாலை, 4:00 மணிக்கு ஐந்தாம் கால பூஜையும், 6:00 மணிக்கு ஆறாம் கால பூஜையும் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல், நாமக்கல் - மோகனூர் சாலை, சித்தர் மலைமேல் அமைந்துள்ள சவுந்தரவள்ளி அம்மை உடனமர் ஜோதி கந்த சந்தனமகாலிங்கேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. பக்தர்களுக்கு இரவு முழுதும் அன்னதானம் வழங்கப்பட்டது. கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலில், நேற்று இரவு, முதல் கால பூஜை நடந்தது. இதில், பால், தயிர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், வில்வ இலை உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சேந்தமங்கலம் சோமேஸ்வரர் கோவிலில், சிவபெருமானுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட, 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், பழையபாளையம் அங்காளம்மன் கோவிலில், அங்காளம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சேந்தமங்கலம், முத்துக்காப்பட்டியில் உள்ள விசாலட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவிலில், 12 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.