நாளையுடன் மகாதீபம் நிறைவு..!

திருவண்ணாமலையில் நாளையுடன் மகாதீபம் திருவிழா நிறைவடைகிறது.

Update: 2023-12-05 10:07 GMT

 திருவண்ணாமலையில் நாளையுடன் மகாதீபம் திருவிழா நிறைவடைகிறது.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இந்த ஆண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகா தீபம் கடந்த 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 9 வது நாளாக நேற்று மகா தீபம் காட்சியளித்தது. விட்டுவிட்டு பெய்யும் கனமழை, பலத்த காற்றிலும் சுடர்விட்டு பிரகாசித்த தீபத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

அண்ணாமலையார் கோயில் ஆன்மிக வழக்கப்படி, மலை மீது தொடர்ந்து 11 நாட்களுக்கு மகாதீபம் காட்சிதரும். அதன்படி, 8 வது நாளான நேற்று மாலை 6 மணிக்கு, மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தம் மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக, திருவண்ணாமலையில் விட்டு விட்டு பரவலான மழை பெய்கிறது. அதோடு, மலை மீது பலத்த காற்றும் வீசுகிறது. ஆனாலும், மழையிலும், காற்றிலும் அணையாமல் சுடர்விட்டு மகாதீபம் காட்சியளிக்கிறது. மேலும், மலை மீது மகாதீபம் ஏற்றும் திருப்பணி தடையின்றி நடந்து வருகிறது. தீபம் ஏற்றுவதற்காக, தினமும் நெய் மற்றும் திரி, கற்பூரம் மற்றும் பூஜை பொருட்கள் அண்ணாமலையார் கோயிலில் இருந்து மலை உச்சிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

மலையில் தீபம் ஏற்றும் முறைதாரர்களான பர்வதகுலத்தினர் மற்றும் கோயில் திருப்பணி ஊழியர்கள், மழையையும், காற்றையும் பொருட்படுத்தாமல் மலைமீது முகாமிட்டு தினமும் தீபம் ஏற்றும் திருப்பணியை நிறைவேற்றி வருகின்றனர். மலை மீது வரும் 6 ம் தேதி நாளை வரை மகாதீபம் காட்சிதரும்.நேற்று இரவு 9 வது நாளாக மகா தீபம் மலையில் காட்சியளித்தது. மிக்ஜாம் புயல், தொடர்மழை மற்றும் பலத்த காற்றிலும் மலைமீது மகாதீபம் தொடர்ந்து காட்சியளிக்கிறது. மேலும், மலை மீது மகாதீபம் காட்சிதரும் நாட்களில் கிரிவலம் செல்வதும், கோயிலில் வழிபடுவதும் சிறப்புக்குரியது. எனவே, அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை கடந்த சில நாட்களாக அதிகரித்திருந்தது.

இந்நிலையில், மலை மீது காட்சிதரும் மகா தீபம் நாளை (6ம் தேதி) இரவுடன் நிறைவு பெறுகிறது. அதைத்தொடர்ந்து, நாளை மறுதினம் (7ம் தேதி) காலை தீப கொப்பரையை மலையில் இருந்து அண்ணாமலையார் கோயிலுக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பின்னர், தீப கொப்பரைக்கு சிறப்பு பூஜைகள் முடிந்ததும், கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்துக்காக வைக்கப்படும். அதைத்தொடர்ந்து, வரும் 27 ம் தேதி அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின்போது, மகாதீப மை (தீபசுடர் பிரசாதம்) சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு அணிவிக்கப்படும். அதன்பிறகு, பக்தர்களுக்கு தீப மை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News