இருள் சூழ்ந்த மாமல்லபுரம் கடற்கரை கோவில்

மாமல்லபுரம் கடற்கரை கோவில் அமைந்துள்ள பகுதியில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

Update: 2023-12-29 09:54 GMT

மாமல்லபுரம் கடற்கரை கோவில் அமைந்துள்ள பகுதியில் மின்விளக்குகள் சரிவர எரியாததால் இரவு நேரத்தில் சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

மாமல்லபுரம் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ஜுனன் தபசு உள்ளிட்ட புராதன சிற்பங்களை பார்த்து ரசித்து செல்கிறார்கள். இதனை இரவிலும் கண்டுகளிக்கும் வகையில், ஒளி அலங்கார மின் விளக்குகள் கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங் வந்தபோது அமைக்கபட்டது., பின்னர் சுற்றுலா பயணிகள் இரவு 9 மணி வரை புராதன சின்னங்களை பார்க்க அனுமதிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து நாளடைவில், மின் விளக்குகள் பழுதடைந்ததால் ஒளிக்காட்சி நிறுத்தப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் முதல் அனைத்து விளக்குகளும் சரி செய்யப்பட்டது. தற்போது கடற்கரைகோவிலில் மட்டும் சுற்றுலா பயணிகள் இரவு 9 மணிவரை அனுமதிக்கப் படுகின்றனர். ஆனால் கடற்கரை கோவில் வளாகத்தில் இருந்த நடைபாதை விளக்குகள் மீண்டும் பழுதடைந்து இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காட்சியளிக்கிறது. தற்போது பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை, நாட்டியவிழா, மார்கழி மாத செவ்வாடை பக்தர்கள் வருகை என சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்து உள்ள நிலையில் இந்த இருள் சூழ்ந்த கடற்கரைகோவில் சுற்றுலா பயணிகளை ஏமாற்றம் அடைய செய்து உள்ளது. கடற்கரை கோவிலை இரவில் நடந்து சென்று பார்க்க விரும்பும் சுற்றுலாபயணிகள் மின் விளக்குகள் இல்லாததால் கோவிலின் கரடு முரடான கருங்கல் நடைபாதையில் தடுமாறுகின்றனர்.

மேலும் முதியோர், பெண்கள், குழந்தைகள் அடிக்கடி விழுந்து காயமடைகின்றனர். எனவே கடற்கரை கோவில் உள்ள பகுதியில் பிரகாசமான விளக்குகளை உடனடியாக அமைக்க தொல்லியல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News