ரயிலில் 30 பவுன் நகைகள் திருடியவர் கைது
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் 30 பவுன் நகைகள் கொள்ளையடித்த நபர் கைது.
By : King 24x7 Angel
Update: 2024-03-14 10:27 GMT
சென்னையை சேர்ந்த சாந்தி என்பவர் குடும்பத்தோடு குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக கடந்த மாதம் சென்னையில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக நாகர்கோவில் வந்தார். நாகர்கோவில் ரயில் நிலையத்தில் வந்த போது சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் ரயிலை விட்டு இறங்கினார்கள். அப்போது அவரது கைப்பையில் இந்த 30 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதையடுத்து அவர்கள் அந்த பையை ரயில் பெட்டி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். நாகர்கோவில், நெல்லை ரயில் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கை ரயில்வே டிஎஸ்பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிசிடிவி காட்சிகளை சோதனை செய்ததில் நெல்லை ரயில் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறங்கி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி நடத்திய விசாரணையில் அவர் நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அன்பழகன் (50) என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது கைப்பையில் இருந்த 30 பவுன் நகைகளை எடுத்து சென்றதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் பாதி அளவு நகைகள் மீட்டதுடன், மீதி நகைகளை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.