மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் கணவன் எடுத்த விபரீத முடிவு

சேலத்தில் குடும்ப தகராற்றில் மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றதால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-08 08:39 GMT

தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் கே.கே. நகர் நியூ காலனியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கண்ணன் (வயது 45) கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சுதா என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதையடுத்து தொழில் நிமித்தமாக சேலம் வந்த கண்ணன் 2-வதாக கல்பனா என்ற பெண்னை திருமணம் செய்து குழந்தைகளுடன் மணக்காடு பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் வரை அவரது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. இதுகுறித்து அக்கம், பக்கத்தினர் அஸ்தம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தனர். அப்போது வீட்டுக்குள் கண்ணன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக காணப்பட்டார். இதையடுத்து போலீசார் கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் கண்ணன் போதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கல்பனா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் விரக்தி அடைந்த கண்ணன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவந்தது .

Tags:    

Similar News