மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மீனபரணி கொடை விழா
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மீனபரணி கொடை விழா நடக்கிறது.
Update: 2024-04-10 02:26 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என்று போற்றப்படுகிறது. இங்கு மாசிக் கொடை விழா கடந்த மாதம் 3-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடந்தது. விழாவில் தமிழக மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குறிப்பாக பெண்கள் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதை தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான இன்று புதன்கிழமை மீன பரணிக் கொடை விழா நடக்கிறது. இதனை ஒட்டி இன்று அதிகாலை முதல் பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, நண்பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, இரவு எட்டு முப்பது மணிக்கு அத்தாழ பூஜை, 9 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகா பூஜை போன்றவை இன்று நடக்கிறது. இந்த விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். பக்தர்கள் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.