கேரளாவுக்கு ரெயிலில் கடத்தப்பட்ட மண்ணுளி பாம்பு பறிமுதல்

கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த பேக்கில் இருந்த மண்ணுளி பாம்பை கைப்பற்றிய ரயில்வே போலீசார் கடத்தல் நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-02-12 08:28 GMT

மண்ணுளி பாம்புடன் போலீசார் 

ரயில்களில் சட்ட விரோதமாக பொருட்கள் கடத்தபடுவதை தடுக்கும் வகையில் சேலம் கோட்ட ரெயில்வே குற்றப்பிரிவு போலீசாரும், தமிழ்நாடு ரெயில்வே போலீசாரும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று முன்தினம் மாலை சேலம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பினு தலைமையில் ஏட்டுகள் கமலநாதன், பெரியசாமி, செந்தில்குமார் மற்றும் கோவை ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் மதன்ராஜ் அடங்கிய குழுவினர் டெல்லி-திருவனந்தபுரம் செல்லும் கேரளா எக்ஸ்பிரஸ் ரெயிலில் (வண்டி எண்-12626) ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அதாவது, சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ஏறி கோவைக்கு செல்லும் வழியில் ஒவ்வொரு பெட்டியாக சோதனை நடத்தினர். இந்த நிலையில் அந்த ரெயில் கோவையை சென்றடைந்தது. அங்கு முதலாவது நடைமேடையில் ரெயில் நின்றபோது, பின்பக்க முன்பதிவில்லா பெட்டியில் ஏறி சோதனை செய்யப்பட்டது. அப்போது கழிவறை அருகே கேட்பாரற்று ஒரு பேக் கிடந்தது. அந்த பேக்கிற்குள் ஏதோ ஒரு பொருள் நெளிவது போல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார், அந்த பேக்கை எடுத்து திறந்து பார்த்தனர்.

அதற்குள் பெரிய மண்ணுளி பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அந்த மண்ணுளி பாம்பை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கேரளாவுக்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த மண்ணுளி பாம்பை கைப்பற்றிய போலீசார், அதை கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது குறித்து அந்த பெட்டியில் இருந்த பயணிகளிடம் விசாரணை நடத்தினர். ஆனால் ரெயிலில் போலீசார் சோதனை செய்வதை அறிந்த மர்ம நபர்கள், மண்ணுளி பாம்பு வைத்திருந்த பேக்கை கழிவறை பகுதியில் வைத்துவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ரெயிலில் சிக்கிய அந்த மண்ணுளி பாம்பு 4.2 அடி நீளத்தில் 5 கிலோ எடை கொண்டதாக இருந்தது. அந்த பாம்பை கேரளாவுக்கு கடத்தி சென்று ரூ.1 கோடிக்கு விற்பனை செய்ய மர்ம கும்பல் திட்டமிட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Tags:    

Similar News