ஆடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல்
குமாரபாளையம் அருகே ஆடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதலால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
By : King 24x7 Website
Update: 2023-12-27 17:36 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கிராமப்பகுதிகள் நிறைய உள்ளன. இதில் விவசாயம் செய்வது ஒரு புறம் இருந்தாலும், பெரும்பாலான விவசாயிகள் ஆடு, மாடு, எருமை, கோழி ஆகியவைகளையும் வளர்த்து, அதனால் வருமானம் ஈட்டி வருகிறார்கள். கால்நடைகள் மேய்ப்பதையே தொழிலாககொண்டு விவசாய கூலி தொழிலாளர்களும் பெரும்பாலோர் உள்ளனர். குறிப்பட்ட ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நோய்கள் கால்நடைகளை தாக்கி வருகின்றன. இதனால் அவைகள் உயிரிழந்தும், சோர்ந்து போயும், செயல்பட முடியாத அளவிற்கு பெரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றன. அது போல் குமாரபாளையம் அருகே வீரப்பம்பாளையம், நல்லாம்பாளையம், குட்டிக்கிணத்தூர், பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆடுகளுக்கு கோமாரி நோய் தாக்கி உள்ளதாக தெரிகிறது. இது குறித்து விவசாயி விஸ்வநாதன் கூறியதாவது: கோமாரி நோய் தாக்கி குட்டிக்கிணத்தூர் பெருமாள் கோவில் பகுதியில் நவீன், 23, என்பவரின் ஆடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதில் ஒரு ஆடு இறந்து விட்டது. மீதமுள்ள சில ஆடுகள் கோமாரி நோய் தாக்கி, கால்கள், நாக்கு, மூக்கு பகுதியில் புண் ஏற்பட்டு நடக்க முடியாத அளவிற்கு உள்ளது. இது இந்த பகுதியில் பல இடங்களில் உள்ள ஆடுகளுக்கு கோமாரி நோய் வந்துள்ளது. இது மேலும் தொடர்ந்து பரவி வருவதால், விவசாயிகள் அச்சம் கொண்டுள்ளனர். இவர்களின் அச்சத்தை போக்கும் வகையில், கால்நடை துறை சார்பில் சிறப்பு முகாம்கள் அமைத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.