மகாவீர் ஜெயந்தியையொட்டி சேலத்தில் இறைச்சி, மீன் கடைகள் அடைப்பு
மகாவீர் ஜெயந்தியையொட்டி சேலத்தில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. மேலும், தடையை மீறி திறக்கப்பட்டுள்ளதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
மகாவீர் ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி இறைச்சி கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகளும், மதுபான பார்களும் மூடப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் நேற்று இறைச்சி கடைகள் மூடப்பட்டன. சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை, பழைய பஸ் நிலையம், ஆற்றோர மார்க்கெட், அம்மாப்பேட்டை, சூரமங்கலம், தாதகாப்பட்டி என அனைத்து பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளை அதன் உரிமையாளர்கள் மூடியிருந்தனர்.
அதேபோல், சூரமங்கலத்தில் உள்ள மீன் மார்க்கெட்டும் மூடப்பட்டது. ஆனால் மகாவீர் ஜெயந்தி என தெரியாமல் ஞாயிற்றுக்கிழமை என்பதை மட்டும் கவனத்தில் கொண்டிருந்த பொதுமக்களில் சிலர், வழக்கம்போல் இறைச்சி கடைகளுக்கு படையெடுக்க ஆரம்பித்தனர். ஆனால் கடைகள் மூடியிருப்பதை பார்த்துவிட்டு அவர்கள் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பியதை காணமுடிந்தது. அதேசமயம், ஒருசில வியாபாரிகள் கோழி இறைச்சிகளை மறைமுகமாக விற்பனை செய்தனர். இருப்பினும், தடை உத்தரவை மீறி இறைச்சி கடைகள் திறக்கப்பட்டுள்ளதா? என மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.