மருத்துவ காப்பீடு திட்ட முகாம் - ஆட்சியர் துவக்கி வைப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகராட்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு 1.40 கோடி குடும்பங்கள் பயன் பெறும் வகையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் காப்பீடு அட்டை வழங்கும் முகாமை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் துவங்கி வைத்தார்.
பொதுமக்களின் உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைகளை கட்டணமில்லாமல் ஏழை மற்றும் குறைந்த வருவாய் பெறும் பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் என்ற உயரிய நோக்குடன் உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான முதலமைச்சர் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் 23.7.2009 அன்று தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது மத்திய அரசின் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துடன் 23.9.2018 முதல் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி ஒரு குடும்பம் ஒரு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை கட்டணமின்றி சிகிச்சை பெறலாம் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்து இருபது ஆயிரத்துக்கும் குறைவாக உள்ள குடும்பங்கள் பயன்பெறலாம். இந்த மருத்துவ காப்பீடு அட்டை பெற குடும்ப அட்டை, ஆண்டு வருமான சான்றிதழ், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் கொடுத்து புதிய காப்பீடு அட்டை பெற்றுக்கொள்ளலாம். இந்த முகாமில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, கத்திலி ஒன்றிய செயலாளர்கள் மோகன்ராஜ்,குணசேகரன், வட்டாட்சியர் சிவப்பிரகாசம் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டனர்.