மேலூர் அருகே மஞ்சுவிரட்டு - சீறி பாய்ந்த காளைகள்
மேலூர் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மஞ்சுவிரட்டில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்தன.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வெள்ளலூர் நாடு மட்டங்கிபட்டியில் ஸ்ரீ மந்தை கருப்பண சுவாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள கட்டழகன் கண்மாயில் அமைக்கப்பட்டுள்ள தொழுவத்தில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
முன்னதாக கிராம முக்கியஸ்தர்கள் ஜவுளி பொட்டலங்களை மேளதாளங்கள் முழங்க சுமந்து வந்து தொழுவத்திற்கு கொண்டு வந்தனர். முதலில் மந்தை கருப்பண சுவாமி கோவில் காளைக்கு மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த காளைகளுக்கு வேஷ்டி, துண்டு மரியாதை செய்யப்பட்டு ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
முன்னதாக அங்குள்ள கண்மாய் வெளிபகுதியில் கட்டுமாடுகளாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை அடக்க முற்பட்டு இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர். இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் வாகனங்களில் அழைத்து வரப்பட்டன.
இந்த மஞ்சுவிரட்டை மட்டங்கிபட்டி,வெள்ளலூர், உறங்கான்பட்டி, அம்பலகாரன்பட்டி, புலிமலைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் மஞ்சுவிரட்டு ஆர்வலர்கள் வந்திருந்து கண்டு கழித்தனர். சீறிப்பாய்ந்த காளையை அடக்க முற்பட்டு இளைஞர்கள் உற்சாகம் அடைந்தனர். இதில் சுமார் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்த மஞ்சுவிரட்டு விழாவில் கீழவளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் வெள்ளலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்வதற்காக தொழுவத்தின் அருகில் நிறுத்தப்பட்டிருந்தன.