பாதாள சாக்கடை குழியில் சிக்கி சாலையில் கவிழ்ந்த மினி லாரி 

நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கி சாலையில் கவிழ்ந்த மினி லாரியால் பரபரப்பு உண்டானது.

Update: 2024-06-12 13:19 GMT

 நாகர்கோவிலில் பாதாள சாக்கடை குழியில் சிக்கி சாலையில் கவிழ்ந்த மினி லாரியால் பரபரப்பு உண்டானது.

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில் உள்ள பெயிண்ட் கடை ஒன்றுக்கு இன்று காலை பெயிண்ட் ஏற்றிக்கொண்டு  நெல்லையிலிருந்து  மினி லாரி ஒன்று வந்தது.  நாகர்கோவில் நகருக்குள் மினி லாரிகள் காலை 9- மணிக்கு மேல் நுழைய தடை விதிக்கப்பட்டு இருப்பதால், டிரைவர் வடசேரியில் இருந்து லாரியை திருப்பி வெட்டூர்ணிமடம் பகுதியில் இருந்து  வாட்டர் டேங்க் ரோடு வழியாக செட்டி குளத்துக்கு சென்று கொண்டிருந்தார்.    

 டதி பள்ளி சந்திப்பு வந்தபோது பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் லாரி சிக்கி மெதுவாக சாயத் தொடங்கியது.       அந்த லாரி சரிந்த பகுதியில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இதில் ஆட்டோ டிரைவர்கள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். லாரி சரிவதை பார்த்து ஆட்டோ டிரைவர்கள் ஓட்டம் பிடித்தனர். ஆனால் அதற்குள் மினி லாரி சாய்ந்து ஒரு ஆட்டோ மீது மோதியது. இதில் அந்த ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது.      

லாரியானது மெதுவாக சாய்ந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இல்லை எனில் மூன்று ஆட்டோ டிரைவர்கள், லாரி டிரைவர் மற்றும் கிளீனர் என மொத்தம் ஐந்து பேருக்கு விபத்து  ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக ஐந்து பேரும் உயிர்தப்பினர்.     சம்பவம் நடந்த இடத்தில்  பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை முழுமையாக நிரப்பாததால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News