தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு
தூத்துக்குடி உப்பாற்று ஓடையில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்வது தொடர்பாக நீர்வளத்துறை அதிகாரிகளுடன் சென்று ஓடையை அமைச்சர் கீதாஜீவன் பார்வையிட்டார்.
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் முத்தையாபுரம் அருகே செல்லும் உப்பாற்று ஓடையை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது, உப்பாற்று ஓடைக்கு செல்லும் உபரிநீர் கால்வாய்களில் முட்செடிகள், மண்திட்டுகள், கழிவுகள் போன்றவற்றால் ஏற்பட்டுள்ள அடைப்புகளை தூர்வாரி அகற்றி மழைநீர் தடையில்லாமல் வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீர்வளத்துறை அதிகாரிகளை அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.
அப்போது, நீர்வளத்துறை தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் வசந்தி, உதவி செயற்பொறியாளர் சுபாஷ், உதவி பொறியாளர் பாலமுருகன், திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர்குழுத் தலைவர் செந்தில்குமார் மற்றும் மணி, அல்பர்ட் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.