மணப்பாறை அருகே பல்நோக்கு கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்
மணப்பாறை அருகே புதிதாக கட்டப்பட்ட பள்ளி, அங்கன்வாடி மற்றும் பல்நோக்கு கட்டிடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூபாய் 2.49 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளிக்கட்டிடம், அங்கன்வாடி மையம், பல்நோக்கு கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டிடங்களையும், புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளையும் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் குத்துவிளக்கேற்றியும், கல்வெட்டுகளையும் அமைச்சர் திறந்து வைத்தார். அங்கன்வாடி மையங்களை திறக்கச் சென்றபோது அங்கிருந்த குழந்தைகள் அமைச்சருக்கு ரோஜா மலர்களை கொடுத்து வரவேற்றனர். அதனை ஆர்வமுடன் பெற்றுக்கொண்ட அமைச்சர் குழந்தைகளுக்கு நன்றியும் தெரிவித்தார்.
பின்னர் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்ததுடன் மாணவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.. விழாவில் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்சமது, வையம்பட்டி ஒன்றிய பெருந்தலைவர் குணசீலன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக வையம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், சீரங்கன், மணப்பாறை நகர செயலாளர் மு.ம.செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கிருஷ்ணகோபால், ஊராட்சி மன்ற தலைவர் சூர்யா சுப்ரமணியன், துவரங்குறிச்சி நகர செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, பழனியாண்டி, சின்னடைக்கன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர்.