பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு - அமைச்சர் தொடங்கி வைப்பு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி சித்தநாதர் திருமண மண்டபத்தில் கூட்டுறவுத் துறையின் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில், கோ ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆனந்தகுமார் முன்னிலையில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம்தென்னசு வழங்கி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பேசுகையில் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்தபடி 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மக்கள் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1000/- ரொக்கப்பணம் சேர்த்து இன்று முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் வழங்கப்படஉள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரிசி பெறும் 2,19,51,748 குடும்ப அட்டைதாரர்கள், 17,365 இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என ஆக மொத்தம் 2,19,71,113 (இரண்டு கோடியே பத்தொன்பது இலட்சத்து எழுபத்து ஓராயிரத்து நூற்று பதின்மூன்று) குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற உள்ளனர். அரசால் இத்திட்டத்திற்காக ரூ.2436,18,77,690/-(ரூபாய் இரண்டாயிரத்து நானூற்று முப்பத்து ஆறு கோடியே பதினெட்டு இலட்சத்து எழுபத்து ஏழாயிரத்து அறுநூற்று தொன்னூறுமட்டும்) அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், இராஜபாளையம் வட்டத்தில் 1,01,399 குடும்ப அட்டைதாரர்களும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 53,157 குடும்ப அட்டைதாரர்களும், வத்திராயிருப்பு வட்டத்தில் 38,178 குடும்ப அட்டைதாரர்களும், சிவகாசி வட்டத்தில் 1,16,551 குடும்ப அட்டைதாரர்களும், சாத்தூர் வட்டத்தில் 41,900 குடும்ப அட்டைதாரர்களும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 35,865 குடும்ப அட்டைதாரர்களும், விருதுநகர் வட்டத்தில் 68,274 குடும்ப அட்டைதாரர்களும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 76,948 குடும்ப அட்டைதாரர்களும் , காரியாபட்டி வட்டத்தில் 33,076 குடும்ப அட்டைதாரர்களும், திருச்சுழி வட்டத்தில் 34,405 குடும்ப அட்டைதாரர்களும்; என 5,99,753 அரிசி வகை குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 1062 குடும்பங்கள் என மொத்தம் என ஆக மொத்தம் 6,00,815 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இதற்காக நமது மாவட்டத்திற்கு ரூ.66,60,33,338/- நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சுழி வட்டாரத்தை பொறுத்தவரை 34,405 அரிசி பெறும் குடும்பஅட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசுத்தொகுப்பு வழங்கும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பணி தொடர்ந்து நடைபெற்று பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்தார்.