கதிர் ஆனந்தை ஆதரித்து அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் பிரச்சாரம்!
வேலூர் சாய்நாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Update: 2024-04-12 09:28 GMT
வேலூர் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்தை ஆதரித்து வேலூர் சாய்நாதபுரத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடி இந்திய நாட்டின் ஆட்சி முறையை மாற்றி ஒரு கட்சி ஆட்சி முறையை கொண்டு வர நினைக்கிறார். ஒரு கட்சி ஆட்சி முறை என்பது சீனா, ரஷ்யா போன்று சர்வாதிகார ஆட்சி முறையாகும். அது ஒருபோதும் இந்தியாவுக்கு சரிவராது. ஒரு கட்சி ஆட்சி முறையின் மூலம் பிரதமர் தன்னை அதிபர் ஆக்கி கொள்ள எண்ணுகிறார். அதிபர் ஆட்சி வந்தால் மக்களுக்கு ஓட்டுரிமையும் கிடைக்காது, கேள்வி கேட்கும் உரிமையும் இருக்காது. இந்த சூழ்நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகவே தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைத்தார். அதற்காகவே அவர் மீது மோடி கடும் கோபம் கொண்டுள்ளார். தமிழக பேரிடர் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.37 ஆயிரம் கோடி கேட்டும் ஒரு பைசா கூட வழங்கவில்லை. இத்தகைய புறக்கணிப்புக்கு தமிழகம் பா.ஜ.க வுக்கு வாக்களிக்காத மாநிலம் என்பதே காரணமாகும். முன்னாள் முதல் அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் பெயர் எடுத்த அ.தி.மு.க. தற்போது அந்த பெயரை கெடுத்து கொண்டிருக்கிறது. முயற்சிக்கிறது.ஆனால், தி.மு.க.வை அழிக்க முடியாது என்பது பிரதமர் மோடிக்கு நன்றாக தெரியும். தமிழகத்தில் தற்போது திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வருவது உறுதியாகும். இந்தியா கூட்டணி வெற்றி பெறும்போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாளம் காட்டுபவரே பிரதமர் ஆவார். எனவே எதிர்க்கட்சிகளை முடக்கி ஒரு பாசிச ஆட்சியை நடத்தி வரும் பா.ஜ.க கூட்டணியை மக்கள் தேர்தலில் வீழ்த்த வேண்டும்," என பேசினார்.