அரசு மருத்துவமனையில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு
சிகிச்சை அளிப்பது குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார்
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை அரசு மருத்துவமனையில் போக்குவரத்துத்துறை அமைச்சர்.சா.சி.சிவசங்கர் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
காரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வருகை தருகின்றார்களா என்றும், மருந்து, மாத்திரைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்றும், முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்றும், சிகிச்சையின் தரம் குறித்தும், மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும் அங்கு பணியாற்றும் மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகள் வரும் சராசரி எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்துகேட்டறிந்தார்.
மருந்துப்பொருட்களின் இருப்புப் பதிவேட்டினை ஆய்வு செய்த மாண்புமிகு அமைச்சர் அவர்கள், மருத்துவமனையின் சுற்றுப்புறங்களையும், நோயாளிகள் அனுமதிக்கப்படும் வார்டுகளையும், கழிவறைகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் அங்கிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் அறிவுறுத்தினார். மழைக்காலமாக இருப்பதால் வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. எனவே மருத்துவர்கள் அனைவரும் தயார் நிலையில் இருக்கவேண்டும். தேவையான அனைத்து மருந்து,மாத்திரைகளையும் போதுமான அளவு இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை தேவைபடும்பட்சத்தில் எக்காரணத்தை கொண்டும் தாமதம் இல்லாமல் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் வழங்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என மருத்துவர்களுக்கு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் அறிவறுத்தினார்கள். இந்த ஆய்வின்போது, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இமயவரம்பன், பூங்கொடி, ஆலத்தூர் வட்டாட்சியர்.சத்தியமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.