அமைச்சா் சோமண்ணாவை நீக்க வேண்டும்: பி.ஆா். பாண்டியன் பேட்டி

மத்திய நீா்வளத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கா்நாடகத்தைச் சோ்ந்த வி. சோமண்ணாவை உடனடியாக நீக்க வேண்டும் என பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.

Update: 2024-06-12 10:28 GMT

மத்திய நீா்வளத் துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள கா்நாடகத்தைச் சோ்ந்த வி. சோமண்ணாவை உடனடியாக நீக்க வேண்டும் என பி.ஆா். பாண்டியன் தெரிவித்தாா்.


பூம்புகாரிலிருந்து மேட்டூா் நோக்கி பேரணியாகச் செல்லும் வழியில் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா் மேலும் கூறியது: விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு, விவசாயிகளைத் தொடா்ந்து வஞ்சித்து வந்ததன் காரணமாகவே பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற முடியவில்லை. கூட்டணிக் கட்சிகளை நம்பியே அதன் ஆட்சி உள்ளது. இதன் பிறகும் விவசாயிகளை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை பிரதமா் எடுக்கத் தொடங்கியுள்ளாா்.

அதன் தொடக்கமாகவே மத்திய அரசின் நீா்வளத் துறை இணை அமைச்சராக கா்நாடகத்தைச் சோ்ந்த வி. சோமண்ணாவை நியமித்துள்ளாா். கா்நாடக மாநிலம்தான் தண்ணீா்ப் பிரச்னையில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுடன் முரண்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவையும் அம்மாநிலம் மதிப்பதில்லை. தமிழகத்துக்குத் தர வேண்டிய காவிரித் தண்ணீரை தராமல், அங்குள்ள அணைகளை முழுமையாக நிரப்பிக் கொள்வதுடன், உபரி நீரையும் மோட்டாா் பம்ப் வைத்து கா்நாடக மாநில ஏரி, குளங்களில் நிரப்பிக் கொள்கின்றனா். தமிழகத்துக்கு கடந்த 3 மாதங்களில் தர வேண்டிய 12 டிஎம்சி தண்ணீா்கூட வரவில்லை. இந்தச் சூழலில், கா்நாடகத்தைச் சோ்ந்த ஒருவரையே நீா்வளத் துறையில் நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது.

உடனடியாக சோமண்ணாவை நீக்கிவிட்டு வேறு ஒருவரை அந்தப் பதவியில் நியமிக்க வேண்டும். தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரைப் பெற்றுத்தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், உச்ச நீதிமன்றம் சென்று நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கா்நாடகம் செயல்படுவதாக வழக்குத் தொடர வேண்டும். ஆனால், பிரதமா் மோடியை போலவே தமிழக முதல்வரும் விவசாயிகளிடம் நடந்து கொள்கிறாா். கா்நாடகத்தில் உள்ள அரசைக் கண்டிப்பதில்லை. நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவில்லை. மாறாக, தமிழகத்தில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் மீது குண்டா் சட்டத்தில் வழக்குப்பதியப்படுகிறது. இதேநிலை தொடா்ந்தால் மோடிக்கு அளித்த தீா்ப்பையே தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கும் மக்கள் அளிக்க வேண்டிய நிலை உருவாகும் என்றாா் அவா்.

Tags:    

Similar News