சிறுபான்மையினர் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் கிறிஸ்துராஜ்

திருப்பூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கிறிஸ்துராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-12 07:30 GMT

ஆட்சியர் கிறிஸ்துராஜ் 

 திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,  தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000 மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6  சதவீத வட்டி விகிதத்திலும், அதிகபட்ச கடனாக ரூ.20,00,000-ம், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8   சதவீதம் பெண்களுக்கு 6  சதவீதம் வட்டிவிகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000-கடன் வழங்கப்படுகிறது.

  கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5  சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டிவிகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,00 கடன் வழங்கப்படுகிறது. சுயஉதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டிற்கு 7 சதவீதம் வட்டிவிகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 10 சதவீதம் பெண்களுக்கு 8 சதவீதம் வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1,50,000 கடன் வழங்கப்படுகிறது.

மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலைதொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்பவர்களுக்கு  அதிகபட்சமாக திட்டம் 1-ன் கீழ் ரூ.20,00,000 வரையில் 3 சதவீதம் வட்டி விகிதத்திலும், திட்டம் 2-ன் கீழ் மாணவர்களுக்கு 8 சதவீதம் மாணவியர்களுக்கு 5 சதவீதம் வட்டி   விகிதத்திலும் ரூ.30,00,000 வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது. எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின்  ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானசான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம்,  திட்டஅறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆணவங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கல்விகடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மைச் சான்றிதழ் கல்விக் கட்டணங்கள் செலுத்திய இரசீது,  சலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்பித்து விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட  கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண் 0421 2999130 மற்றும் dbcwotpr@gmail.com ல் விவரம் பெற்றுக் கொள்ளலாம்.  மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் அனைத்து சிறுபான்மையின மக்கள் கடனுதவி பெற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News