வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்காணிப்பு
சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் 100 சதவீத பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.;
Update: 2024-05-02 02:12 GMT
சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் 100 சதவீத பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சேலம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் 100 சதவீத பாதுகாப்புடன் கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தெரிவித்தார். சேலம் நாடாளுமன்ற தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட இருப்பு அறையில் வைக்கப்பட்டது. அங்கு சேலம் வடக்கு, மேற்கு, தெற்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய 6 சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகளுக்கு ‘சீல்’வைக்கப்பட்டு அங்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் 250 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யும் வகையில் ஓட்டு எண்ணும் மையத்தை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். 100 சதவீத பாதுகாப்பு பின்னர் இதுகுறித்து அவர் கூறும் போது, கோடை வெயிலின் காரணமாக கண்காணிப்பு அறையில் உள்ள அனைத்து உபகரணங்களும் தொடர்ச்சியாக இயங்கும் வகையில் குளிர்சாதன வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. எனவே வாக்குப்பதிவு எந்திரங்கள் 100 சதவீத பாதுகாப்புடன் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார். இந்த ஆய்வின் போது சேலம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்கள்) சிவசுப்பிரமணியன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அம்பாயிரநாதன், மாறன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.