பொன்னேரி ரயில் நிலையத்தில் குரங்கு தொல்லை; பயணியர் அச்சம்
ரயில் நிலையத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் பயணியர்கள் அச்சம். குரங்குகளை பிடிக்க, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
By : King 24x7 Angel
Update: 2024-02-14 09:59 GMT
பொன்னேரி ரயில் நிலைய நடைமேடைகளில், ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை அங்குள்ள குப்பையில் கிடைக்கும் உணவு பொருட்களை உண்கின்றன. பயணியர் கைகளில் வைத்திருக்கும் பழம், பிஸ்கட் உள்ளிட்டவைகளையும் பறித்து செல்கின்றன. ரயிலுக்கு காத்திருக்கும் பயணிரை அச்சுறுத்தலுடன் இவை பார்க்கின்றன. நடைமேடை, நடைமேம்பாலம், பயணியர் இருக்கை என இவை கூட்டமாக சுற்றித்திரிவதால் பயணியர் அச்சத்திற்கு ஆளாகின்றனர். இவை வரும்போது பயணியர் அங்கும் இங்கும் நகர்கின்றனர். நடைமேம்பாலங்களில் இவை கூட்டமாக இருப்பதால், பயணியர் பயன்படுத்த முடியாமல் நடைமேடையின் கடைசி பகுதிக்கு சென்று தண்டவாளங்களை கடக்கின்றனர். ரயிலில் ஏறும், இறங்கும் இடங்களில் இவை இருப்பதால், பயணியருக்கு பெரும் இடையூறும் ஏற்படுகிறது. ரயில் நிலையத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. குரங்குகளை பிடிக்க, ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.