ஏரிக்கரை தடுப்பை நீட்டிக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ராஜாநகரம் ஏரிக்கரையில் தடுப்புகளை முழுமையாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆர்.கே.பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், ராஜாநகரம் ஏரிக்கரை வழியாக, 1.5 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைந்துள்ளது. இப்பகுதியில் பல்வேறு வளைவுகளுடன் சாலை அமைக்கப்பட்டு இருந்ததால், அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு வந்தன. 12 ஆண்டுகளுக்கு முன், ஆந்திராவில் இருந்து திருமண வீட்டாருடன் வந்து கொண்டிருந்த லாரி, ஏரியில் கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இதில், 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
அதை தொடர்ந்து ஏரிக்கரை சாலை திருப்பங்கள் படிப்படியாக நேர் செய்யப்பட்டன. விபத்துகளும் குறைந்தன. சமீபத்தில், ஏரிக்கரை சாலை மணல் மூட்டைகள் அடுக்கி, விரிவாக்கம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மணல் மூட்டைகள் அடுக்கப்பட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும், இரும்பு தடுப்புகள் நடப்பட்டுள்ளன. இந்த இரும்பு தடுப்பு முழுமையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் வாயிலாக விபத்துகளும் தவிர்க்கப்படும்.