வேகத்தடை இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதி !
மறைமலைநகர் - ஆப்பூர் சாலையில் வேகத்தடை இல்லாததால், அடிக்கடி விபத்து ஏற்படும் சுழல் உள்ளதால் வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-18 06:10 GMT
மறைமலை நகர் - ஆப்பூர் சாலை, 7 கி. மீ. , தூரம் உடையது. இந்த சாலையை சட்டமங்கலம், பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சிங்கபெருமாள்கோவில் - ஸ்ரீபெரும்புதூர் சாலையின் இணைப்பு சாலை. இந்த சாலையில் தினமும் 1, 000க்கும் மேற்பட்ட இரு சக்கரம் மற்றும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. மறைமலை நகர், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரகடம் பகுதிக்கு வேலைக்கு செல்வோர், இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பேரமனூர் சிவன் கோவில் சந்திப்பு பகுதியில், திருக்கச்சூர் - மறைமலைநகர் - ஆப்பூர் சாலை சந்திப்பு வளைவு உள்ளது. இப்பகுதியில் வேகத்தடை இல்லாததால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த பகுதியில் சேதமான சாலை, கடந்தாண்டு புதிதாக அமைக்கப்பட்டது. இந்த பகுதியை கடக்கும் வாகனங்கள், சாலை வளைவில் அதிவேகத்தில் செல்கின்றன. இதன் காரணமாக பலர் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே, இந்த பகுதியில் வேகத்தடை அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.