எம்பிக்கள் சஸ்பெண்ட் - விடுதலை சிறுத்தைகள் ரயில் மறியல் 

நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட 141 எம்.பிக்களின் இடைநீக்கத்தை கண்டித்தும், ஒன்றிய மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் பட்டுக்கோட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ரயிலை மறித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2023-12-21 01:28 GMT

நாடாளுமன்ற தாக்குதல் குறித்து கேள்வி எழுப்பிய எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சகட்டமாகும். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல்.திருமாவளவன் உள்ளிட்ட 141எம்.பிக்களின் இடை நீக்கத்தை கண்டித்து, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ரயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பட்டுக்கோட்டைக்கு வந்த காரைக்குடி - மயிலாடுதுறை பயணிகள் ரயிலை திடீரென மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் எம்.பிக்களின் இடைநீக்கத்தை கண்டித்தும், ஒன்றிய மோடி அரசு உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திலிருந்த பட்டுக்கோட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர்  பிருதிவிராஜ்சௌகான் தலைமையிலான காவல்துறையினர் ரயில் மறியல் போராட்டம் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். ரயில் மறியல் போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் அரவிந்த் குமார் தலைமை வகித்தார். மாவட்ட செய்தி தொடர்பாளர் வெற்றிச்செல்வன், ஒன்றியச் செயலாளர்கள் நாகேந்திரன் (பட்டுக்கோட்டை கிழக்கு), சசிகுமார் (பட்டுக்கோட்டை மேற்கு), சிவா (பேராவூரணி தெற்கு), செந்தில்குமார் (திருவோணம் தெற்கு), செல்வராஜ் (மதுக்கூர்), முருகேசன் (சேதுபாவாசத்திரம்), அதிராம்பட்டினம் நகரச் செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News