தீச்சட்டி ஏந்தி சென்ற பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்கிய இஸ்லாமியர்கள்
கோட்டைமேடு விளையாட்டு மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவையொட்டி தீச்சட்டி எடுத்து பள்ளிவாசல் வழியாக வந்த பக்தர்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் வழங்கி அப்பகுதி இஸ்லாமியர்கள் தங்களது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தினர்.
கோவை:உக்கடம் கோட்டைமேடு பகுதியில் விளையாட்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.இந்த கோவிலர தேர் திருவிழா நேற்று நள்ளிரவு நடைபெற்றது.இதனை முன்னிட்டு கோட்டைமேடு கோவில் வீதியில் உள்ள தரிக்கத்துல் இஸ்லாம் ஷாபியா சுன்னத் ஜமாத் சார்பில் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு இரவு நேரத்தில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
அம்மன் சிலைகளை தலையில் ஏந்தியபடி ஊர்வலம் பக்தர்கள் ஜமாத் வழியாக வந்தனர்.அதன் பின்பு ஏராளமான பக்தர்கள் அலகுகுத்தி,தீச்சட்டி ஏந்தி,பால்குடம் ஏந்தியபடி வந்தனர்.அப்படி வந்த பக்தர்களுக்கு பள்ளிவாசல் முன்பாக இருந்த இஸ்லாமியர்கள் தண்ணீர் மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை வழங்கி மத நல்லிணககத்தை வெளிப்படுத்தினர். ஆண்டுதோறும் நள்ளிரவில் நடைபெறும் இந்த கோவில் திருவிழாக்களின் பொழுது, இஸ்லாமியர்கள் உறுதுணையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.