சிம்ம வாகனத்தில் பவனி வந்த முத்துமாரியம்மன் - பக்தர்கள் பரவசம்
தாந்தோணிமலை பகுதியில் சிம்ம வாகனத்தில் பவனி வந்த முத்துமாரியம்மன். பக்தர்கள் பரவசம்.
Update: 2024-04-02 06:51 GMT
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் திருவிழா மார்ச் 31 ஆம் தேதி துவங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியாக கம்பம் போடும் நிகழ்ச்சி அன்று இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் நேற்று இரவு ஏப்ரல் ஒன்றாம் தேதி அலங்கரிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி தாந்தோணி மலை பகுதியில் வலம் வந்தது. அப்போது மேளதாளங்கள் முழங்க ஊர்வலம் வந்ததை பார்த்த பொதுமக்கள் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். ஒவ்வொரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சியை உபயதாரர்கள் தங்கள் செலவில் ஏற்று நடத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில்,தாந்தோணி மலை அக்ரஹாரத்தைச் சேர்ந்த ஆண்டாள் அம்மாள் & சன்ஸ் குடும்பத்தினர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து சிம்ம வாகனத்தில் ஊர்வலம் நிகழ்ச்சிக்கான செலவினத்தை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து வரும் ஏப்ரல் 5-ம் தேதி பூச்சொரிதல் விழாவும், ஏப்ரல் 9-ம் தேதி பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், ஏப்ரல் 11-ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.