உதவி செய்வது போல் நடித்து ரூ.5 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்
நம்பர் 1 டோல்கேட் அருகே சாலை விபத்தில் காயம் அடைந்தவருக்கு உதவு போல் நடித்து ரூ.5 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
Update: 2024-01-08 09:41 GMT
பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மேல வாளாடியைச் சேர்ந்தவர் முருகேசன் என்பவர் தனியார் நிறுவத்தில் வினியோகஸ்தராக இருந்து வருகிறார். இவரது நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் ஜாபர் என்பவர் பல்வேறு கடைகளில் வசூல் செய்த பணம் ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு மேலவாளடியில் உள்ள உரிமையாளர் முருகேசனிடம் கொடுப்பதற்காக மோட்டார் பைக்கில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ் சாலையில் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அரியலூரில் இருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று, நம்பர் 1 டோல்கேட் அருகே முருகன் கோவில் பகுதியில் எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜாபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அப்போது மருத்துவமனைக்கு செல்ல ஆம்புலன்ஸில் ஏற்ற அவருக்கு உதவி செய்வது போல் நடித்து அவரிடம் இருந்த வசூல் பணம் ரூ. 5 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் பணத்தை திருடிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.