ஒரே மேடையில் அனைத்து கட்சி வேட்பாளர்கள் சந்திப்பு

நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அனைத்து கட்சி லோக்சபா வேட்பாளர்களும் ஒரே இடத்தில் சந்திக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-31 03:55 GMT

நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அனைத்துக் கட்சி லோக்சபா வேட்பாளர்களுடன் சந்திப்பு கூட்டம் நாமக்கல் சேலம் சாலையில் உள்ள சங்க வளாகத்தில் நடைபெற்றது. சங்க கவுரவ தலைவர் வாங்கிலி, ட்ரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க தலைவர் அருள் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசினார். நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணி, திமுக கூட்டணியின் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கனிமொழி, தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி வேட்பாளர் டாக்டர் எழில் செல்வன் ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொண்டு ஒரே மேடையில் பேசினார்கள்.

லாரி உரிமையாளர்கள் சார்பில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகள் விபரம்: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் மத்திய மாநில அரசுகள் இந்த தொழிலின் வளர்ச்சிக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற பல்வேறு வாக்குறுதிகளை கூறும் அரசியல் கட்சிகள், டீசலுக்கு ஒரே விலை அறிவிக்கவில்லை. தமிழகத்தை விட கர்நாடகாவில் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ. 7 விலை குறைவாக உள்ளது. இப்படி இருக்கும்போது தமிழகத்தில் எப்படி லாரி தொழிலை நடத்த முடியும்.

எனவே மத்திய மாநில அரசுகள் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவந்து நாடு முழுவதும் ஒரே விலையை நிர்ணயிக்க வேண்டும். மிகவும் அத்தியாவசியப் பொருளான டீசல் விலை நிர்ணயம் செய்யும் உரிமையை மத்திய அரசு வைத்துக்கொள்ள வேண்டும். நாடு முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகளில் ஆயிரக்கணக்கான சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒரு லாரிக்கு ஓராண்டுக்கு லட்ச கணக்கில் வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய வருவாயாக உள்ளது. இது மட்டுமல்லாமல் காலாண்டு வரி, தேசிய பர்மிட் வரி போன்ற பல்வேறு வரிகள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் லாரி போக்குவரத்த்தில் ஈடுபட்டுள்ள உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளையும் அளிப்பதில்லை.

நெடுஞ்சாலைகளில் 50 கி.மீ தூரத்திற்கு ஒரு இடத்தில் லாரிகள் நிறுத்துமிடம் மற்றும் டிரைவர்கள் ஓய்வறை அமைக்க வேண்டும் என்று சட்டம் இருந்தும் அதை செயல்படுத்துவதில்லை. வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துதல், ஸ்பீடு கவர்னர் பொருத்துதல், 3எம் ஸ்டிக்கர் ஒட்டுதல் போன்று பல்வேறு வழிகளில் பணம் சுரண்டப்படுகிறது. ஆன்லைன் அபராதம் என்ற முறையில் தவறு செய்யாத வாகனங்களுக்கும் அபராதம் விதிக்கப்படுகிறது. நாமக்கல்லில் ஆயிரக்கணக்கான லாரிகள் உள்ளன, ஆனால் லாரிகள் நிறுத்துவதற்கு லாரி ஸ்டேண்ட் இல்லை. பல தேர்தல்களில் இதை வாக்குறுதியாக கொடுத்த அரசியல் கட்சிகள் இதுவரை நிறைவேற்றவில்லை. நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே லாரி பாடி பில்டிங் கிளஸ்டர் அமைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பாதியில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கொங்கு மண்டலத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக பெரும்பான்மையான மக்களால் செய்யப்பட்டு வரும் போக்குவரத்து தொழிலைக் காப்பாற்ற போக்குவரத்து தொழிலுக்காக தனி நல வாரியம் அமைத்து தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்து பேசிய லோக்சபா தொகுதி வேட்பாளர்கள், நாங்களும் லாரி போக்குவரத்து தொழிலில்தான் ஈடுபட்டுள்ளோம். தேர்தலில் தாங்கள் வெற்றிபெற்றால் லாரி உரிமையாளர்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவோம் என கூறினார்கள். கூட்டத்தில், லாரி உரிமையாளர்கள், டிரெய்லர் உரிமையாளர்கள், எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள், ஆட்டோமொபைல் உரிமையாளர்கள், டயர்கடை உரிமையாளர்கள், லாரி பணிமனை உரிமையாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News