தீர்த்தவாரி கண்டருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராபத்து 10ம் நாளான நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.

Update: 2024-01-02 01:45 GMT

வைணவ திருத்தலங்களில் முதல் திருத்தலமானது ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வைகுந்த ஏகாதசி விழா டிச. 12- ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கிநடைபெற்றது. விழாவில் முக்கிய நிகழ்வான மோகினி அலங்காரம் டிச.22ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து திருவாய் மொழித்திருநாள் எனும் இராப்பத்து முதல் நாளான்று (டிச.23) வைகுந்த ஏகாதசியின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு நம்பெருமாளை தரிசித்தனா்.

இதையடுத்து தினமும் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பரமபதவாசல் வழியாக வந்து இராப்பத்து மண்டபமான திருமாமணி மண்டபத்தில் பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். இராப்பத்தின் கடைசி நாளான நேற்று  தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சின்னபெருமாள் வந்து சேர்ந்தார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் சந்திரபுஷ்கரணியில் காலை 10 மணியளவில் நம்பெருமாளுக்கு பதிலாக தீர்த்தபேரர் புனித நீராடினார். நம்பெருமாள் கரையில் நின்றவாறு தீர்த்தபேரர் நீராடுவதை கண்டருளினார். இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சியை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் இருந்து புறப்பட்டு பவித்ர உற்சவ மண்டபத்திற்கு காலை 10.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1 மணி முதல் மதியம் 3 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் இரவு பொதுஜனசேவை நடைபெற்றது.

பவித்ர உற்சவ மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவின் நிறைவு நாளான இன்று  காலை 6 மணிக்கு நம்மாழ்வாா் மோட்சம் நடைபெறவுள்ளது.அதனை தொடா்ந்து மூலஸ்தானத்தில் இயற்பா பிரபந்தம் இரவு 8.30 மணிக்கு தொடங்கி புதன்கிழமை காலை 6 மணிக்கு தீா்த்த விநியோக கோஷ்டியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

Tags:    

Similar News