தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு கூட்டம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு கூட்டம்தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு.
Update: 2024-04-10 08:41 GMT
தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் நாகா அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முடிவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு முழு ஆதரவு தெரிவிப்பது என்றும், தமிழகம் முழுவதும் அந்த கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இது குறித்து கூட்டமைப்பின் மாநில தலைவர் நாகா அரவிந்தன் நிருபர்களிடம் கூறும் போது, ‘தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு அனைத்து மாநிலங்களில் நல வாரியம் உள்ளது போல தமிழகத்திலும் நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் 10 சதவீத இட ஒதுக்கீடு விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும். ஆரிய வைசிய சமூக மக்களின் குலதெய்வமான வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானங்கள் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும். தமிழக அரசின் சலுகைகளை தெலுங்கு மொழி பேசும் மக்களுக்கு விரைவில் கிடைத்திட வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் குறித்து தமிழக முதல்-அமைச்சரிடம் எடுத்து கூறியுள்ளோம். அதற்கு அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். எனவே நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சியினருக்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளோம்’ என்றார். அப்போது வீர சைவ ஜங்கம முன்னேற்ற நல சங்க மாநில நிறுவன தலைவர் ஆர்.பாபு உடனிருந்தார்.