சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரிக்கு புதிய அங்கீகாரம்
சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரிக்கு புதிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் சோனா தொழில்நுட்ப கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் மதிப்புமிக்க ஏ பிளஸ் பிளஸ் கிரேடு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதுகுறித்து சோனா கல்வி குழுமத்தின் தலைவர் வள்ளியப்பா சேலத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- சேலத்தில் 67 ஆண்டுகளுக்கு மேலாக கல்வி சேவையில் சோனா கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 1997-ம் ஆண்டில் சோனா தொழில்நுட்ப கல்லூரி நிறுவப்பட்டது. தற்போது சுமார் 6 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
தற்போது தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலின் (என்ஏஏசி) மதிப்பு மிக்க ஏ பிளஸ் பிளஸ் (ஏ++) கிரேடு கிடைத்துள்ளது. அதாவது, கல்வி செயல்முறைகள், விளைவுகள், பாடத்திட்டம், கற்பித்தல், கற்றல் செயல்முறைகள், ஆசிரிய, ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட 85 பல்வேறு அளவீடுகளில் நிறுவனங்களின் செயல்திறன் அடிப்படையில் புள்ளி அளவில் 3.65 பெற்று மிகவும் மதிப்புமிக்க உயர்ந்த மதிப்பீடு கிடைத்துள்ளது.
தற்போது எலக்ட்ரிக்கல் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் போன்ற புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. சோனா கல்வி குழுமத்தில் படிக்கும்போதே மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்கிறோம்.
தற்போது புதிதாக பாரா மெடிக்கல் கல்லூரி தொடங்கவும், விரைவில் சோனா கல்வி நிறுவனத்தை பல்கலைக்கழகமாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டியின்போது, சோனா கல்வி குழுமத்தின் துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா, முதல்வர்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், இன்டர்னல் குவாலிட்டி அஷ்யூரன்ஸ் செல் குழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.