60 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய குடிநீர் இணைப்பு

திருப்பூர் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் 4-வது குடிநீர் திட்டத்தின் மூலம், புதியதாக 60 ஆயிரம் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், வரும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் இந்த பணிகள் முழுமை பெறும் எனவும் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-10 01:50 GMT

 மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் 

 திருப்பூர் மாநகர் நாள்தோறும் வளர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மக்களும் இங்கு வாழ்ந்து வருகிறார்கள். நாள்தோறும் பின்னலாடைத் தொழிலை நம்பி இந்தியாவின் கடைக்கோடி கிராமங்களில் இருந்து, இங்கு பிழைப்புக்காக குடிபெயரும் மக்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதனால் தொடர்ச்சியாக மாநகராட்சி பகுதியில் மக்கள்தொகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மாநகராட்சியில் 60 வார்டுகளிலும், தொழிலாளர்களும், தொழில் நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் உள்ளன.

இதன் காரணமாக மக்கள் தொகை  எண்ணிக்கைக்கு ஏற்ப, மக்களுக்கான அடிப்படை வசதிகளுக்கான தேவையும் கூடுகிறது. அதன் ஒருபகுதியாக அத்தியாவசியத் தேவையான குடிநீருக்காக, திருப்பூர் மாநகராட்சிக்கான 4- ம் குடிநீர் திட்டத்தை மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த பிப். 11-ம் தேதி ரூ. 1191 கோடி மதிப்பில் திறந்து வைத்தார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து, 4-ம் குடிநீர் திட்டம் திருப்பூர் மாநகராட்சிக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல வார்டுகளில் குடிநீர் விநியோகம் துவங்கி உள்ளது. விடுபட்ட பகுதிகளில் தற்போது குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகத்தை மாநகராட்சி ஆணையர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து வருகிறார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கூறியதாவது: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தொழிலாளர்களின் தற்போதைய எண்ணிக்கை மற்றும் எதிர்கால தேவையை கருத்தில்கொண்டு, குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மாநகரில் கடும் கோடையிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், குடிநீர் விநியோக பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சியில் 2 லட்சம் குடிநீர் இணைப்புகள் உள்ளது. மாநகராட்சி பகுதியில் 4-வது குடிநீர் திட்டம் மூலம் 55 எம்.எல்.டி., 3-வது குடிநீர் திட்டம் மூலம் 90 எம்.எல்.டி, 2-வது குடிநீர் திட்டம் மூலம் 20 எம்.எல்.டி. என நாள் ஒன்றுக்கு 165 எம்.எல்.டி. குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது

. 4-வது குடிநீர் திட்டத்தின் மூலம் கூடுதலாக வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. விடுப்பட்ட பகுதிகளுக்கான பணிகள் வேகம் பெற்றுள்ளன.  4-வது குடிநீர் திட்டத்தின் மூலம் 60 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் குழாய்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த பணிகள் முழு வேகம் பெற்றுள்ளன. வரும் ஆக. மாத இறுதிக்குள் குடிநீர் குழாய் பொருத்துதல் மற்றும் வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் அனைத்து பணிகளும் நிறைவுறும்.”இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News