புத்தாண்டு கொண்டாட்ட விதிமுறைகள் - மாவட்ட எஸ்பி அறிவிப்பு
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பின்பற்ற வேண்டியவை குறித்த உத்தரவை, பெரம்பலூர் மாவட்ட காவல்துறையின் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி புத்தாண்டு அன்று இளைஞர்களோ அல்லது சிறுவர்களோ சாலையில் இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்வது, வேகமாக பயணிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலையின் நடுவே கேக் வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் கவனக் குறைவாகவும் அதிவேகமாகவும் வாகனத்தை இயக்குதல் கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலைகளில் மது அருந்திவிட்டு பொதுமக்களிடம் தொந்தரவு செய்யும் வகையில் நடந்துகொள்ளுதல் கூடாது.
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றுதல் போன்ற செயல்களில் ஈடுபடுதல் கூடாது. புத்தாண்டு நிகழ்ச்சிக்காக வெளியூருக்கு செல்லும் நபர்கள் தங்களது வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் முன்புறம் உள்ள அலமாரியிலோ அல்லது வீட்டின் முன்புறமுள்ள எந்த ஒரு பகுதியிலும் சாவியை வைத்துவிட்டு செல்லுதல் கூடாது. விடுமுறைக்கு நீண்ட நாட்கள் வெளியூருக்கு செல்லும் பொதுமக்கள் கட்டாயம் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துவிட்டு செல்லுதல் வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சாலைகளில் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் கூடாது. பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் எத்தகைய செயல்களிலும் இளைஞர்கள் ஈடுபடுதல் கூடாது என பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.