உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் கல்லுாரி மாணவர்கள் ஒருவரையொருவர், கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல்;
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் இயங்கும் கல்லுாரிகளில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள், உத்திரமேரூர் பேருந்து நிலையத்திற்கு, தினமும் பேருந்துக்காக கும்பலாக வந்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும்போது, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டால், கத்தியை காட்டி ஒருவரையொருவர் மிரட்டுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், அங்குள்ள பயணியர் அச்சமடைந்து உள்ளனர். இரு நாட்களுக்கு முன், உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் கல்லுாரி மாணவர்கள் ஒருவரையொருவர், கத்தியை காட்டி மிரட்டி கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதற்குள், அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பின், அங்கு பேருந்துக்காக நின்று கொண்டிருந்த மாணவர்களிடம், போலீசார் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளனவா என, சோதனை செய்தனர். தொடர்ந்து, மாணவர்களிடம் ஏதும் இல்லாததால், அவர்களை போலீசார் அனுப்பி விட்டனர். பொது இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட, போதுமான போலீசார் இல்லாததே, இதுபோன்ற சம்பவங்கள் நடக்க காரணமாக உள்ளதாக, அப்பகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.