அருப்புக்கோட்டையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி; ஆண்கள் பெண்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு; போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்க பரிசு எல்.இ.டி டிவி போன்ற பரிசுகள் வழங்கப்பட்டது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாபெரும் மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் ஆன்லைன் வாயிலாகவும் நேரடியாகவும் விண்ணப்பம் செய்தனர். இந்த மாரத்தான் போட்டியை முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம் துவக்கி வைத்தார். காந்தி நகரில் இருந்து துவங்கிய இந்த மாரத்தான் போட்டியில் சுமார் 2,000 பேர் பங்கேற்றனர். காந்திநகர், பந்தல்குடி சாலை, கஞ்சநாயக்கன்பட்டி வழியாக சென்று மீண்டும் காந்தி நகருக்கு வந்து இந்த மாரத்தான் ஓட்டம் நிறைவுற்றது. இந்த போட்டிகளில் இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த ஓட்டப்பந்தய வீரருக்கு முதல் பரிசாக ரூபாய் பத்தாயிரம் ரொக்க பணம் மற்றும் எல்இடி டிவியும், இரண்டாம் பரிசாக ரூபாய் ஐந்தாயிரம் ரொக்க பணம் மற்றும் எல்இடி டிவி, மற்றும் மூன்றாம் பரிசாக ரூபாய் 3000 ரொக்க பணம் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.