பரபரப்பு
ஊராட்சி பகுதியை நகராட்சி பகுதியுடன் இணைக்க கூடாது என தெரிவித்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்த கிராம மக்களால் பரபரப்பு;
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அப்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் குள்ளம்பாளையம் அடுத்த உடையாம்பாளையம் பகுதி சேர்ந்த 7, 8 -வது வார்டு மக்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-நாங்கள் அனைவரும் கோபி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குள்ளம்பாளையம் ஊராட்சியின் 7-வது வார்டு மற்றும் 8-வது வார்டில் வசித்து வருகிறோம். தற்பொழுது எங்கள் ஊராட்சியை கோபிசெட்டிபாளையம் நகராட்சி உடன் இணைக்க உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அறிகிறோம். எங்கள் பகுதியான நியாய விலை கடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மயானம், அரசு சார்ந்த அலுவலகங்கள் அனைத்தும் நாவிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளதாலும் எங்கள் பகுதி முழுவதும் விவசாயத்தினை மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளதாலும் கோபி நாகராட்சி பகுதியில் எங்கள் ஊராட்சியை இணைப்பதால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பறிபோவதோடு எங்களுக்கு அடிப்படை வசதிகளும் கிடைக்கப் பெறாது. மேலும் எங்கள் பகுதிக்கு உண்டான வாக்குச்சாவடி 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே எங்கள் பகுதியை குள்ளம்பாளையம் ஊராட்சி (உடையாம்பாளையம்) அருகே உள்ள நாதிபாளையம் ஊராட்சியுடன் இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.