வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்து வருவதை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு வீரப்பன் சத்திரம், பெரியவலசு, இரட்டைப்பாளி கோயில் வீதி பகுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்- இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட இடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நடமாடிய இருவரை பிடித்து விசாரித்ததில் ஒருவர் அதே பகுதியில் உள்ள கொத்துக்காரர் வீதியை சேர்ந்த கதிரவன் (27) என்பதும், மற்றொருவர் வீரப்பன் சத்திரம், மாரப்பன் வீதியை சேர்ந்த நவீன்குமார் (23) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்கள் வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்தும் வகையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்த 100 கிராம் அளவிலான 10 மாத்திரைகள் கொண்ட 9 அட்டைகளில் இருந்த 90 மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.இதில், கதிரவன் மீது ஏற்கனவே போதை மாத்திரை விற்பனை வழக்கும், நவீன் குமார் மீது, அடிதடி வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.